தந்தையின் அருகில் துடிதுடித்த சிறுவன்; எமனாக மாறிய இரும்பு கட்டில்!!
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 35 வயதான கோபி கண்ணன். தையல்காரரான இவர், வீட்டிலேயே துணிகள் தைத்து வருகிறார். இவரது மனைவி 32 வயதான யோகேஸ்வரி, நத்தம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர்களின் 10 வயது மகன் கார்த்திக், அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்கள் மாடியில் வசித்து வரும் நிலையில், யோகேஸ்வரியின் சகோதரர் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு, யோகேஸ்வரி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தந்தை-மகன் இருவரும் இரும்பு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளனர்.
எதிர்பாராத விதமாக, நள்ளிரவில் திடீரென கட்டிலின் இரும்பு போல்ட் கழன்று விழுந்துள்ளது. இதனால் கோபியின் தலை கம்பிக்கட்டிலின் இடையில் சிக்கியுள்ளது.
உறக்கத்திலும், போதையிலும் இருந்த கோபி கண்ணன் சிக்கியதில் இருந்து மீள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் மீள முடியாமல் கீழே விழுந்த மகனின் மீது விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் இவர்கள் இருவரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை கார்த்திக் பள்ளிக்குச் செல்ல கீழ வராததால் அவரின் மாமா, சிறுவனை எழுப்ப மேலே சென்ற போது அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.