குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்..!! தமிழ்நாடு மருத்துவக் குழு 2 மணி நேரத்திற்கும் மேல் தீவிர விசாரணை..!!
யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தமிழ்நாடு மருத்துவக் குழு விசாரணை நடத்தியுள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபான், அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் குழந்தையின் முகத்தை முதல்முறையாக காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, தனது மனைவியின் பிரசவ வீடியோவை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை, இர்ஃபானே வெட்டுகிறார். இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று கூறுகின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஊரக நலப்பணி துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும் என மருத்துவத்துறை சார்பாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூடியூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார். இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்திருந்தனர். இந்நிலையில், மருத்துவம் பார்த்த சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ சில்ட்ரன்ஸ் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரிடம் தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை 7:40 மணியளவில் தொடங்கிய விசாரணையில் 3 பேர் கொண்ட மருத்துவ குழு அதிகாரிகள், மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, மருத்துவமனையின் ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், மருத்துவ சட்டத்தை மீறி செயல்பட்டது குறித்தும் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
Read More : புயல் வந்தால் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!