இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த ஈரான்!… உலகையே உலுக்கும் போர்!… முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு!
Iran: காஸா முனையில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லஹியான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலும் ஈரானும் பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரு தரப்பில் இருந்தும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தப்பட்டபோதும், அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாமல் இருந்தனர். இப்போது காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரைத் தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் தேதி தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. எனினும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது. தூதரக தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்ததுடன், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இஸ்ரேல் மீது ஈரான் முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் இரு நாடுகளிடையே நேரடி போர் மூளும் அபாயம் உள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த போருக்கிடையில், எம்.எஸ்.சி.ஏரீஸ் என பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் பாகிஸ்தான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணித்துள்ளனர்.
இந்த 25 மாலுமிகளில் 17 மாலுமிகள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போர்ச்சுகீசிய கொடியுடன் பயணித்த எம்.எஸ்.சி.ஏரீஸ் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள் சிறை பிடித்தனர். ஈரான் புரட்சி படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்த கப்பல் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கப்பலில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உசைன் அமீர்-அப்துல்லாஹியான் இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரிடம் பேசிய ஜெய்சங்கர், “இந்த நிலை கவலையளிப்பதாக உள்ளது. இந்திய மாலுமிகளை சந்திப்பதற்கு அனுமதி வேண்டும். அதற்கு ஈரான் அரசு உதவி செய்ய வேண்டும்.” எனக் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய உசைன் அமீர்-அப்துல்லாஹியான், “மாலுமிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஈரான் செய்து தரும்.” எனக் கூறியுள்ளார்.
மேலும், காஸா முனையில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லஹியான் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: ஐபிஎல் வரலாற்றில் இவங்கதான் டாப்!… அதிக ஸ்கோர் அடித்த ஐதராபாத்!… மிக நீள மீட்டர் சிக்ஸ் விளாசிய DK!