TNEB: ஐபிஎல்தான் காரணம்!… வழக்கத்தை விட கூடுதலாக, 100 மெகா வாட் வரை அதிகரித்த மின் தேவை!
TNEB: ஐ.பி.எல்., கிரிக்கெட்டால் மட்டும், மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக, 100 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது என்று மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழக மின்தேவை தினமும் பகலில், 15,000 மெகா வாட்டாகவும்; காலை, மாலையில், 16,000 மெகா வாட்டாகவும் உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடு, கோடை வெயிலால், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மின் தேவை கடந்த, 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு எப்போதும் இல்லாத வகையில், 19,409 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவு.
கடந்த சனி, ஞாயிறு வார விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், மின் தேவை சற்று குறைந்து சில தினங்களாக, 16,500 - 17,000 மெகா வாட்டாக உள்ளது. தமிழக இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என, அனைவரிடமும் அதிக வரவேற்பு பெற்ற ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளன. இதனாலும், மின் தேவை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாலையில் இருந்து நள்ளிரவு வரை தான் மின் தேவை அதிகம் உள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், தினமும் மாலையில் ஒன்று; இரவில் ஒன்று என, இரு போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டியை பலரும், 'டிவி'யில் மட்டுமின்றி, மொபைல் போனிலும் பார்க்கின்றனர். போனை அடிக்கடி சார்ஜிங் செய்கின்றனர். அதனால் தற்போது, ஐ.பி.எல்., கிரிக்கெட்டால் மட்டும், மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக, 100 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.