ஐபிஎல் ஏலம்!… இன்றுதான் கடைசி!… வீரர்களுக்கு கெடு விதித்த நிர்வாகம்!
ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் இன்றைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
2024 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி 10 அணிகளும், நிர்வாகமும் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 19 ஆம் தேதி மினி ஏலம் நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் இன்றைக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், பதிவு செய்யும் வீரர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழை (என்.ஓ.சி.) அளித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பினால் பிசிசிஐ-யிடம் என்.ஓ.சி. வாங்கியிருக்க வேண்டும்.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்கு சுமார் 700 வீரர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா, இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா போன்ற வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு அணிகள் அதிக ஆர்வம் காட்டலாம். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை இழுப்பதற்கு 5 அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 அணிகளிலும் 77 வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. அந்த அடிப்படையில் 70க்கும் அதிகமான வீரர்கள் இந்த ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்களை அணிகள் ஏலத்தில் எடுக்கலாம். வீரர்களை விடுவித்த வகையில் ரூ. 262.95 கோடி 10 அணிகளிடமும் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.