செம மாஸ்.! மார்ச் 22 சென்னையில் தொடங்கும் IPL 2024.! 17-வது சீசன் பற்றிய முழு விபரம்.!
உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்த பின்பு வெளியிடப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது
இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 17 வது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக cricbuzz இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்ற செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது பிசிசிஐ நிர்வாகிகள் இதனை உறுதி செய்திருப்பதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது .
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதை ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கிரிக்பஸ் இணையதளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அந்த இணையதளத்திற்கு பேட்டி அளித்த அவர் 2024 ஆம் வருட ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என அறிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி உடன் மோத இருக்கும் அணி எது என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாட இருக்கும் அணி எது என்பது பற்றி விவரம் தங்களுக்கு தெரியவில்லை என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனும் தெரிவித்துள்ளார்.
17 வது ஐபிஎல் சீசன் குறித்து பேசிய அருண் துமால் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார். முதலில் 10 முதல் 12 நாட்களுக்கான போட்டிய அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்த அவர் தேர்தல் கமிஷன் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகளை அறிவித்த பின்பு ஐபிஎல் போட்டிகளுக்கான முழு அட்டவணையும் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டி தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் ஹோம் கிரவுண்டுகள் தவிர மற்ற இடங்களிலும் போட்டி நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் கமிஷன் மார்ச் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் 17வது சீசனின் முழு அட்டவணையும் வெளியிடப்படும். மேலும் இந்த வருட ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் என அருண் துமால் உறுதிப்படக் கூடியிருக்கிறார்.
கடந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்பு நடைபெற்ற 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது தல தோனி உடன் களமிறங்க உள்ளது. அதே நேரம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த பாண்டியா 2022 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் மினி ஏலத்தில் டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விலைக்கு வாங்கியது.