ஐபோன்கள் ஹேக்!… அரசை விமர்சித்து அமெரிக்க ஊடகம் செய்தி வெளியீடு!… மத்திய அமைச்சர் பதிலடி!
எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை மத்திய அரசு ஹேக் செய்வதாக அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் பயன்படுத்தும் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சி செய்வதாகவும் அதுபற்றிய எச்சரிக்கை வெளியானதை அடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்தச் செய்திக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வாஷிங்டன் போஸ்ட் செய்தி அரைகுறை உண்மையை வைத்துப் புனையப்பட்டுள்ளது என்று சாடியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்டின் செய்தியின் லிங்க்கைப் பகிர்ந்து தனது கருத்தைக் கூறியுள்ள அமைச்சர், "வாஷிங்டன் போஸ்டின் பயங்கரமான கட்டுக்கதையை மறுப்பது அலுப்பூட்டுகிறது. ஆனால் யாராவது ஒருவர் அதைச் செய்யத்தான் வேண்டும். இந்தச் செய்தியில் அரைகுறையான உண்மைகள் கற்பனையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். "ஹேக்கிங அச்சுறுத்தல் அறிவிப்புகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்களும் காரணம் என்று கூறவில்லை" என ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 31ஆம் தேதி தெரிவித்தது. இது வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் விடுபட்டுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்த சம்பவத்திற்கான தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் நானும் சீரானதாகவும் தெளிவாகவும் பதில் அளித்துள்ளோம். ஆப்பிள் நிறுவனம் தான் அவர்களின் சாதனங்கள் ஹேக்கர்களால் பாதிக்கப்படக்கூடியதா இல்லையா என்பதையும் ஹேக்கிங் எச்சரிக்கை அறிவிப்புக் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும்" என்றும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எடுத்துரைத்துள்ளார். "சிஇஆர்டி (CERT) இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதுதான் உண்மைகள். மீதமுள்ள கதைகள் அனைத்தும் முகமூடி அணிந்த கற்பனைகள்" என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.