GUJARAT | ரம்ஜான் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.!! அகமதாபாத்தில் பதற்றம்.!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பயின்று வரும் வெளிநாட்டைச் சேர்ந்த 5 இஸ்லாமிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குஜராத் காவல்துறையினர் 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்குள்ள ஏ பிளாக் விடுதியில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்தியதாக தெரிகிறது. அப்போது வெளியில் இருந்து வந்த 20 முதல் 25 பேர் அடங்கிய கும்பல் தொழுகை நடத்திய மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் இஸ்லாமிய மாணவர்களின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த ஐந்து இஸ்லாமிய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 25 நபர்கள் மீது உனக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் நகர காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிலமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் உஸ் பேகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதலில் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் மாணவர்களின் விடுதி அறையும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தால் அகமதாபாத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.