சர்வதேச மோசடி அழைப்புகள்..!! ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!
இந்திய எண்களைக் காண்பித்து வரும் அனைத்து சா்வதேச மோசடி அழைப்புகளையும் தடுக்குமாறு (பிளாக்) தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய தொலைப்பேசி எண்களுடன் சா்வதேச மோசடி கும்பல் அழைப்புகளை மேற்கொண்டு, இந்தியா்களிடம் இணைய குற்றம், நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி அழைப்புகள் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளபட்டதுபோல் கைப்பேசி திரையில் தென்படும். ஆனால், அழைப்பு வரி அடையாள (சிஎல்ஐ) நுட்பத்தைக் கையாள்வதன் மூலம் வெளிநாட்டில் இருக்கும் இணைய குற்றவாளிகளால் இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சட்டவிரோத பாா்சல் அனுப்பியதாக மிரட்டுவது, போதைப்பொருள் மோசடி, அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவற்றுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சா்வதேச மோசடி அழைப்புகள், எந்தவொரு இந்திய தொலைத்தொடா்பு சந்தாதாரரையும் சென்று அடையாதவாறு கண்டறிந்து தடுக்க ஒரு அமைப்பை மத்திய தொலைத்தொடா்பு துறை மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. அழைப்புகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்திய லேண்ட்லைன் எண்களுடன் உள்வரும் சா்வதேச மோசடி அழைப்புகள் ஏற்கனவே நிறுவனங்களால் தடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதையும் மீறி வரும் மோசடி அழைப்புகள் குறித்து சஞ்சாா் சாத்தி வலைதளத்தில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.8 லட்சம் தொலைப்பேசி எண்களை 60 நாட்களுக்குள் உடனடியாக மறு சரிபாா்க்குமாறு தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பகுப்பாய்வில் சுமாா் 6.80 லட்சம் தொலைப்பேசி இணைப்புகள் மோசடியானவையாக இருக்கலாம் என்று மத்திய அரசு கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : திடீரென குறைந்த தக்காளி வரத்து..!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இல்லத்தரசிகள் அவதி..!!