இனி வந்தே ரயிலில் 500 மில்லி தண்ணீர்! தண்ணீரை மிச்சம் செய்ய, ரயில்வே நிர்வாகம் முடிவு..!
தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு இனி 500 மில்லி தண்ணீர் பாட்டில் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் விரைவாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக வசதி இருப்பதாலும் அதே நேரத்தில் விரைவாக பயணிப்பதாலும் மக்கள் பலர் இந்த ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வந்தே பாரத் ரயில் குறிப்பிட ரயில் நிலையங்களில் அதுவும், சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பதால் பயணிகள் வெளியில் இருந்து உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவது என்பது சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது. இதனால், வந்தே பாரத் ரயில் உணவிற்கும் சேர்த்து டிக்கெட்டுடன் பணம் செலுத்தி உணவை பெற்றுக் கொள்ள முடியும். அந்த உணவுடன் சேர்த்து ஒவ்வொரு பயணிக்கும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை ரயில்வே நிர்வாகம் வழங்கி வந்தது.
வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் தங்கள் பயண நேரத்தில் இந்த ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை முழுமையாக பயன்படுத்துவதில்லை. இதனை கருத்தில் கொண்டு, தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும், தண்ணீரை சேமிக்கும் வகையிலும் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இனிமேல், பயணிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக, 500 மில்லி தண்ணீர் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், பயணிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் கட்டணம் ஏதுமின்றி மற்றொரு பாட்டிலை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.