Jio Outage : முடங்கியது ஜியோ... கடுப்பான வாடிக்கையாளர்கள்..!! என்னதான் பிரச்சனை?
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ முடங்கியதால், அதன் பயனர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். அறிமுகமான வேகத்திலேயே, களத்திலிருந்த ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட முன்னோடி நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ அடித்து துவம்சம் செய்தது. குறிப்பாக 4ஜி நுட்பத்துடன் அறிமுகமான ஜியோ, நாட்டின் இணைய வசதியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. போட்டி நிறுவனங்களை வேறுவழியின்றி 4ஜி, 5ஜி என அடுத்த தலைமுறைகளுக்கு தாவச் செய்தது.
சேவை வழங்குவதில் மட்டுமன்றி அவ்வப்போது முடங்கிப்போவதிலும் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்கள் தொடர்ந்து கதற வைக்கிறது. இந்த வரிசையில் இன்றைய தினம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜியோ டெலிகாம் தளம் முடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை பகுதியில் ஜியோ சேவை பெரியளவில் முடங்கியுள்ளது. ஜியோ மொபைல் இணைய சேவை மட்டுமன்றி ஃபைபர் வழி சேவையும் மொத்தமாக முடங்கியது.
இதனால் பொதுவான இணைய பயன்பாடுகள் மட்டுமன்றி, வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் ஊழியர்கள் நொந்து போனார்கள். இதர தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த வகையில் முடக்கத்துக்கு ஆளாயின. இணைய சேவை முடக்கத்தை கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் கூற்றுப்படி, பல்லாயிரக்கணக்கான ஜியோ பயனர்கள் டவுன்டிடெக்டர் தளத்தில் தங்கள் புகார்களை குவித்தனர்.
இது தவிர வேறு பல பிராந்தியங்களிலும் ஜியோ சேவை முடங்கியுள்ளன. இதனால் அங்குப் பலருக்கும் மொபைல் சர்வீஸ் கிடைக்கவில்லை. சாதாரணமாக நெட் சேவையை யூஸ் செய்வது, கால் பேசுவது உள்ளிட்ட சேவைகளைக் கூட பயன்படுத்த முடியவில்லையாம். இந்த விவகாரம் குறித்து ஜியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதே நேரம் நெட்டிசன்கள் பலரும் தங்களால் எந்தவொரு சேவையையும் பயன்படுத்த முடியவில்லை என்று புலம்பித் தள்ளி வருகிறார்கள். இது குறித்து டவுன் டிடெக்டரின் என்ற டெக் நிறுவனம் கூறுகையில், "மும்பை மற்றும் பிற பிராந்தியங்களில் ஜியோ செயலிழப்பு காணப்படுகிறது. ஜியோ செயலி கூட வேலை செய்யவில்லை. மும்பை முழுவதும் ஜியோ மொபைல் சேவை முடங்கியுள்ளது... சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய செயலிழப்பாக இது இருக்கிறது" என்கிறார்கள்.