20 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் முதல் வந்தே பாரத்!. வந்தே மெட்ரோ சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
PM Modi: மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று கடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு தனது சொந்த மாநிலமான குஜராத்க்கு முதல்முறையாக பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார். இந்தநிலையில் புஜ் மற்றும் அகமதாபாத் இடையே பல வந்தே பாரத் ரயில்கள் மற்றும் நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவையையும் பிரதமர் இன்று (திங்கள்கிழமை) கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதுமட்டுமல்லாமல், காந்திநகரில் RE-INVEST 2024 இன் 4வது பதிப்பின் தொடக்க விழா மற்றும் அகமதாபாத்தில் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அகமதாபாத் மற்றும் காந்திநகரை இணைக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்து, மெட்ரோ ரயிலில் சவாரி செய்கிறார்.
கோலாப்பூர்-புனே, புனே-ஹூப்பள்ளி, நாக்பூர்-செகந்திராபாத், ஆக்ரா கான்ட் முதல் பனாரஸ், மற்றும் துர்க் முதல் விசாகப்பட்டினம் உள்ளிட்ட வழித்தடங்களில் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ சேவை ஒன்பது நிலையங்களில் நின்று 360 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கும். இது புஜில் இருந்து காலை 5:05 மணிக்கு புறப்பட்டு 10:50 மணிக்கு அகமதாபாத் சந்திப்பை அடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
PMAY-Gramin திட்டத்தின் கீழ் 30,000 வீடுகளுக்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கவுள்ளார். மேலும், இந்த வீடுகளுக்கான முதல் தவணை தொகை வெளியிடுவதுடன், PMAY திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதையும் தொடங்கிவைக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: நோட்!. இன்றுமுதல் UPI பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கும்!. ஒரு நாளில் எவ்வளவு பணம் மாற்றலாம்?