டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!… பாகிஸ்தான் ரெக்கார்டை உடைத்து அசத்தல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா அணி, தான் ஆடிய நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும். இதுவரை 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளை பெற்று உள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் அணியை முந்தி இந்தியா டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணியாக மாறி உள்ளது. அது மட்டுமின்றி, பாகிஸ்தான் அணியை விட அதிக வெற்றி சதவீதம் கொண்டுள்ளது இந்திய அணி. இந்தியா 66.66 வெற்றி சதவீதம் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி 62.04 வெற்றி சதவீதம் கொண்டுள்ளது. மேலும், டெஸ்ட் அந்தஸ்து கொண்ட கிரிக்கெட் அணிகளில் அதிக டி20 வெற்றி சதவீதம் கொண்ட அணி இந்தியா தான்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனி இந்தியாவே டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணியாகவும், அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணியாகவும் இருக்கும். இந்திய அணியின் இந்த சாதனையை முறியடிக்க பாகிஸ்தான் அணியால் முடியும் என்றாலும் இந்தியா அடுத்த இரு மாதங்களில் இன்னும் இரண்டு டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதில் அதிக வெற்றிகளை பெற்றால் இந்தியாவின் வெற்றிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். அதனால், பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் முந்தி முதல் இடத்தை பிடித்து விட முடியாது. இந்த சாதனையை தவிர, இந்திய மண்ணில் 2019 பிப்ரவரி முதல் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்ற அரிய சாதனை ஒன்றையும் செய்துள்ளது. இதன் மூலம், இந்திய மண்ணில் டி20 தொடர்களில் இந்திய அணியை வீழ்த்த முடியாது என்ற பெயரையும் பெற்றுள்ளது.