"தயவு செய்து உதவுங்கள்.."! அமெரிக்காவில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்..!! மத்திய அரசுக்கு மனைவியின் உருக்கமான கடிதம்.!
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் அமெரிக்காவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரை காப்பாற்ற வேண்டி, அந்த மாணவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது .
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இவரை கொடூரமாக தாக்கிய நான்கு மர்ம நபர்கள் இவரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
மேலும் வீடியோ பதிவு செய்திருந்த அலி அந்த வீடியோவில் தன் உயிரை காப்பாற்றுமாறு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தது அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கும் அலியின் மனைவி செய்யது ரூல்கியா பாத்திமா ரிஸ்வி "என்னுடைய கணவரின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ உதவிகள் கிடைக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிக்கொள்கிறேன். நான் என் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று என் கணவரை பார்த்துக் கொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தனது கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.