TEJAS | பயிற்சியின் போது பாலைவனத்தில் விழுந்து நொறுங்கிய இந்திய ராணுவ விமானம்.!
இந்திய ராணுவத்தின் பாரத் சக்தி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட தேஜஸ் என்ற போர் விமானம் ஜெய்சால்மார் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் இலகுரக விமானமான தேஜஸ் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் நடைபெற்று வரும் ஊர் ஒத்திகை பயிற்சியின் போது ஜெய்சால்மார் பகுதியில் உள்ள பாலைவனத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது விமானி எந்தவித சேதமும் இன்றி பத்திரமாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறினார்.
இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேஜஸ் போர் விமானத்தின் முதல் விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவத்தின் பலனை பரிசோதிக்கும் வகையில் பாரத் சக்தி என்ற பெயரில் ராணுவ ஒத்திகை நடைபெற்று வருகிறது.
டி-90 (ஐஎம்) டாங்கிகள், தனுஷ் மற்றும் சாரங் கன் சிஸ்டம்ஸ், ஆகாஷ் ஆயுத அமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் ட்ரோன்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் பயிற்சியில் பங்கேற்றன. இந்திய ராணுவம் மேம்பட்ட தரைப் போர் மற்றும் வான்வழி கண்காணிப்பு திறன்களை இந்தப் பயிற்சி காட்டுவதாக அமைந்தது.