கென்யாவில் வெடித்த கலவரம் ; இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!!
கென்யாவில் வரி விதிப்பு போராட்டால் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்ரிக்க நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது. இதையடுத்து, வரிகளை உயர்த்த அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரி உயர்வை கைவிடுவதாக அரசு தெரிவித்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக வரி உயர்வு திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக, பார்லிமென்டில் நேற்று விவாதம் நடந்தது. அந்த நேரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பார்லிமென்டை முற்றுகையிட்டனர். அங்கிருந்த தடுப்புகளை உடைத்து, அவர்கள் முன்னேறினர்.
இதை தடுப்பதற்காக, கென்யா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்பு அதிகம் இருக்கலாம் என தெரிகிறது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள், பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்நிலையில் கென்யாவில் உள்ள இந்தியர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கென்யாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்” என கோரப்பட்டுள்ளது.
Read more ; இந்திய அணியில் இடம்பெறாத வருண் சக்கரவர்த்தி..!! விரக்தியுடன் போட்ட பதிவு வைரல்..!!