"நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன்..!!" - ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா தற்போது கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டி20 உலகக் கோப்பையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரவீந்திர ஜடேஜா, "நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். இனி அந்தப் பணி மற்ற வடிவங்களில் அதைத் தொடரும்.
டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார் ஜடேஜா.
Read more | உலகக்கோப்பை டிராபியை கட்டி அணைத்தபடி தூங்கிய சூர்யகுமார் யாதவ்!! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்