"கத்தார் சிறையில் வாடும் 8 முன்னாள் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதுவர்.." - வெளியுறவுத் துறை அமைச்சகம் பகிர்ந்த தகவல்.!
கத்தார் நாட்டில் பணிபுரிந்த இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்கரை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்த தகரா குளோபல் டெக்னாலஜி அண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் ஆலோசகர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கத்தார் நாட்டில் உளவு பார்த்த குற்றத்திற்காக 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவு பிரிவு இவர்களை கைது செய்தது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியினால் கடந்த டிசம்பர் மாதம் இவர்களது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. தற்போது இவர்கள் கத்தார் சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தூதரக அதிகாரிகளுடன் கத்தார் சிறையில் இருக்கும் முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இந்திய அரசாங்கம் செய்து வருவது குறித்து உரையாடியதாகவும் இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் " கத்தார் நாட்டின் சிறையில் வாடும் முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சந்தித்து உரையாடினர். மேலும் அவர்கள் நலன் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து மேல்முறையீடு செய்வதற்கு 2 மாதங்கள் கால அவகாசம் உள்ளது. மேல் முறையீடு தொடர்பாக நமது சட்ட ஆலோசகர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.மேலும் இந்த வழக்கு தொடர்பாக கத்தார் உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக நமது வழக்கறிஞர்கள் குழு முடிவு செய்யும் என தெரிவித்திருக்கிறார்.