இனிமேல் எல்லாத்தையும் இந்தியாதான் நிர்ணயிக்கும்!… அண்ணாமலை பேச்சு!
2050ல் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியா நிர்ணயிக்கும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் அதன் தலைவர் அண்ணாமலை தொகுதி, தொகுதியாக என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக பூவிருந்தவல்லி அருகே வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல் முறை வாக்காளர்களான மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதில், “வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 142 கோடி இந்தியர்கள் எப்படி வசிக்கப் போகிறார்கள் என மாணவர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும். கடைக்கோடி கிராமத்தில் சாலை, வீட்டுக்கு வீடு குடிநீர், எரிவாயு இணைப்பு வழங்க திட்டம், 2024 ஒரு ரூபாய் செலவில்லாமம் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, “ராமர் கோவில் மூலம் 25 ஆயிரம் கோடி வரியாக கிடைக்கும். அயோத்தி ராமர் கோவில் சுற்றுலாத்தளமாக மாறும். இதனால் அருகே உள்ள மாநிலங்கள் வளர்ச்சி அடையும். 2047க்கு நாம் செல்லும் போது, ஒவ்வொருவர் கையில் பிடிப்பது எதுவாக இருந்தாலும், அது இந்தியாவில் தயாரித்த பொருளாகதான் இருக்கும். இன்றைக்கு செல்போன் போன்ற சாதனங்கள் தைவானில் தயாரிக்கப்படுகிறது. அத்தகைய தொழில்நுட்பம் நிறைந்த இந்தியா உருவாக அரசியல் முக்கியம், அறையில் யார் அமர வேண்டும் என்பது உங்கள் கையில் உள்ளது.
நாங்கள் தொடர்ந்து பேசுவதெல்லாம் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி. அடுத்து வரும் 25 ஆண்டுகளில் நிச்சயமாக வளர்ச்சி அடைவோம். ஒரு தனி மனிதன் கூட முன்னேற்றம் இல்லாமல் இருக்க மாட்டார். உலகம் எப்படி இருக்க வேண்டும் என 100 ஆண்டுகள் பிரிட்டனும், 75 ஆண்டுகள் அமெரிக்காவும் தீர்மானித்தன. அதேபோல் 2050ல் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என இந்தியா நிர்ணயிக்கும், அதற்கான கட்டமைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று பேசினார்.