இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்!… வரலாறு படைக்க வேண்டும்!… விராட் கோலிக்கு மம்தா வாழ்த்து!
உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. 35வது பிறந்தநாளையொட்டி விராட் கோலி, இன்றைய போட்டியில் வரலாறு படைக்க வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே காணாத அணியாக உள்ளது இந்தியா. லீக் சுற்றில் இந்தியா இன்னும் 2 போட்டிகளில் விளையாட வேண்டும். இந்நிலையில் சம பலம் கொண்ட அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. அதாவது புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.
தென்னாப்பிரிக்க அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 229 ரன்கள் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ஆட்டம் அரையிறுதி போட்டிக்கு இணையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசுரத்தனமாக இருப்பதால் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.
இருப்பினும், இந்த பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி முதலிடத்தில் நிறைவு செய்யுமா என்பதைத்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலியின் இன்றைய பிறந்த நாளில் அவர் ஏதேனும் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், விராட் கோலிக்கு ரசிகர்கள் என பலரும் வாழ்த்து வருகின்றனர். அந்தவகையில், விராட் கோலிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாள் அன்று எங்கள் மண்ணில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கும் போட்டி, வரலாற்று சிறப்பு மிக்கதாய் அமைய வாழ்த்துவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் விராட் கோலி அவருடைய பிறந்த நாளில் 49-வது சதத்தை அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.