ராணுவம், போலீஸ் கட்டுப்பாட்டில் இந்தியா..!! விமான நிலையங்கள், தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிரடி சோதனை..!!
நாடு முழுவதும் நாளைய தினம் (ஜனவரி 26) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நாளை ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனால், டெல்லியில் 70 பாரா மிலிட்டரி கம்பெனிகளும், 15,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர், துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ரயில் நிலையம், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்துக்கிடமாக தங்கி இருப்பவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர். மேலும், போலீசார் ஆங்காங்கே ரோந்துப் பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த சோதனை நடைபெறுகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் எப்போதும் இல்லாத வகையில் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.