"இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது" -பிரதமர் மோடி இரங்கல்..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 92 வயதான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கடந்த சில காலங்களாக உடல் நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மன்மோகன் சிங் இன்று காலமானார்.
டாக்டர் மன்மோகன் சிங் 1991-96 ஆம் ஆண்டில் PV நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பணியாற்றினார். அப்போது அவர் இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தினார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது.மேலும் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார். பத்து ஆண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இரங்கல் பதிவில், " இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
Read More: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டம்..!!