இந்தியா சிமெண்ட் சாம்ராஜ்ஜியம்..!! வெளியேறும் என்.ஸ்ரீனிவாசன்..!! அடித்து தூக்கிய அல்ட்ரா டெக்..!!
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 9-வது பெரிய பட்டியலிடப்பட்ட சிமெண்ட் நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகிக்கிறார். 1946இல் எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் சிமெண்ட் தொழிற்சாலை நெல்லை மாவட்டம் தாழையூத்து என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரா என 7 ஒருங்கிணைந்த சிமெண்ட் தொழிற்சாலைகளும், ராஜஸ்தானில் ஒன்று (தனது துணை நிறுவனமான திரிநேத்ரா சிமெண்ட் லிமிடெட்) மற்றும் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு அரைக்கும் தொழிற்சாலைகளை இந்தியா சிமெண்ட்ஸ் வைத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட் மற்றும் ராசி கோல்டு என 3 முக்கிய பிராண்டுகளை வைத்துக்கொண்டு தென்னிந்திய சிமெண்ட் வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இந்த பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தில் பிர்லா குழுமத்தின் சிமெண்ட் நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், ஞாயிற்றுக்கிழமை 32.72% பங்குகளை அதன் ப்ரோமோட்டர்களிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அல்ட்ராடெக் சிமெண்ட், கடந்த ஜூன் மாதம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7,05,64,656 பங்குகளைப் ரூ.268 என்ற விலையில் முதல் பங்கு கைப்பற்றல் ஒப்பந்தம் மூலம் வாங்கியது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸின் 22.77% பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றியது.
இதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர்கள் மற்றும் இணை நிறுவனங்களிடம் இருந்து 10,13,91,231 பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தில் 28.07.2024 அன்று கையெழுத்திட்டுள்ளது. இந்த 10.13 கோடி பங்குகளை ஒரு பங்கிற்கு ரூ.390 என மொத்தம் ரூ.3,954 கோடி மதிப்பீட்டில் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சுமார் 55% பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் கைப்பற்றுகிறது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தை ஆதித்யா பிர்லா கைப்பற்றுகிறது.
இதன் மூலம் நிறுவனத்தின் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்தும், நிர்வாகத்தில் இருந்தும் வெளியேறுகிறார். இந்தியா சிமெண்ட்ஸ் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் இரண்டாம் முறை பங்கு கைப்பற்றல் நிறைவு பெறும் வரை நிறுவனத்தின் மேலாண்மையில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, பங்கு கைப்பற்றல் முடியும் வரை மட்டுமே என்.ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திலும், நிர்வாகத்திலும் இருப்பார்.