IND vs NZ Women 3rd ODI!. ஸ்மிரிதி மந்தனா அபார சதம்!. தொடரை வென்று இந்திய பெண்கள் அணி அசத்தல்!.
IND vs NZ Women 3rd ODI: நியூசிலாந்து மகளிர் அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்.24ம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 59 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதையடுத்து, 27ம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் அணி 76 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து 49.5 ஓவரில் 232 ரன் குவித்து ஆல் அவுட்டானது. புரூக் ஹாலிடே அதிகபட்சமாக 86 ரன் (96 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஜார்ஜியா பிளிம்மர் 39, இசபெல்லா கேஸ் 25, லீ டுஹுஹு 24*, மேடி கிரீன் 15 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர் (3 பேர் ரன் அவுட்).
இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 3, பிரியா மிஷ்ரா 2, ரேணுகா சிங், சைமா தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா இணைந்து துரத்தலை தொடங்கினர். ஷபாலி 12 ரன்னில் வெளியேற, மந்தனா – யஸ்டிகா பாட்டியா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது.யஸ்டிகா 35 ரன் எடுத்து சோபி டிவைன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மந்தனா அதிரடியாக விளையாடி நியூசி. பந்துவீச்சை சிதறடித்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தனர்.
மந்தனா 100 ரன் (122 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஹன்னா ரோவ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 22 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா 44.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஹர்மன்பிரீத் கவுர் 59 ரன் (63 பந்து, 6 பவுண்டரி), தேஜல் ஹசப்னிஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மந்தனா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Readmore: பெண்களுக்கு குட் நியூஸ்…! முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு…! முழு விவரம் இதோ