IND VS AUS 4வது டெஸ்ட்!. 'பாக்சிங் டே' போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாழ்வா, சாவா போட்டி!
IND VS AUS: ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி, ‘பாக்சிங் டே’ போட்டியாக இன்று தொடங்குகிறது. இந்த தொடர், ‘ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ போட்டிக்கானது என்பதால் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. தொடர்ந்து 3வது டெஸ்ட் டிரா ஆனதால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 4வது ஆட்டம் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டாக இன்று மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ள ஆட்டம் என்பதால் வென்றாக வேண்டிய நெருக்கடி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.
ஆனால் நடப்பு சாம்பியனான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸிக்கு இறுதியாட்டத்தில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனினும் நடப்புத் தொடரில் முன்னிலைப் பெறவும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்கவும் இரு அணிகளுக்கும் வெற்றி அவசியம். அதனால் இரு அணிகளும் வெற்றிக்கும், சாதனைக்கும் மல்லுக் கட்டும் என்பதால் இன்று தொடங்கும் பாக்சிங் டே டெஸ்ட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
கிறிஸ்துமஸ் விழாவுக்கு கிறிஸ்துவ ஆலயங்களில் உள்ள பெட்டிகளில் போடப்படும் காணிக்கைகள், வீடுகளுக்கு பெட்டி (பாக்ஸ்), பெட்டியாக வரும் பரிசுப் பொருட்களை மறுநாள் திறந்து பார்ப்பார்களாம். அதனால், டிச.26ம் தேதியை ‘பாக்சிங் டே’ என்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாடுகளில் அழைப்பர். அன்று கேளிக்கைகளை காண செல்வதும், முக்கிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதும் வழக்கம். அவற்றில் ஒன்று விளையாட்டுகளை காணச் செல்வது. அந்த வகையில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் அந்த நாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ‘பாக்சிங் டே’ போட்டி என்பது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல; கால்பந்து, ரக்பீ என மற்ற விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.
ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் மெல்போர்ன் நகரில் மட்டுமே நடக்கின்றன. இந்தியா 1985ம் ஆண்டு முதல் ஆஸியுடன் பாக்சிங் டே டெஸ்ட்டில் விளையாடி வருகிறது. இதுவரை இரு அணிகளும் மெல்போர்னில் 9 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் (1985, 1991, 1999, 2003, 2007, 2011, 2014, 2018, 2020) விளையாடி உள்ளன. அதில் 1985, 2014ல் நடந்த 2 போட்டிகள் டிரா ஆனது. இடையில் நடந்த 5 போட்டிகளிலும் ஆஸி தொடர்ந்து வென்றுள்ளது. கடைசியாக 2018, 2020ம் ஆண்டுகளில் நடந்த 2 பாக்சிங் டே டெஸ்ட்களிலும் இந்தியா அபார வெற்றியை சுவைத்துள்ளது. இப்போது ஹாட்ரிக் வெற்றிக்காக களம் காண இருக்கிறது.
Readmore: மதுரை டங்ஸ்டன் விவகாரம்… மத்திய அரசின் முயற்சி வீணானது…! அமைச்சர் துரைமுருகன் புது விளக்கம்