கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்!. 22 வயது இந்திய மாணவர் கொலை!. ஒருவர் கைது!
Canada: கனடாவில் சமையல் அறையில் ஏற்பட்ட தகராறில் இந்திய வம்சாவளி மாணவரை, கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், ஒன்டாரியோ மாகாணத்தின் சர்னியா நகரில் உள்ள ஒரு வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குராசிஸ் சிங், 22, தங்கி இருந்தார். இவர், அங்குள்ள லாம்ப்டன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வணிக மேலாண்மை படித்து வந்தார்.இவருடன், ஹன்டர் என்பவரும் அதே அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி தங்கள் அறையின் சமையல் அறையில் இருந்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது. அப்போது சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்த ஹன்டர், குராசிஸ் சிங்கை பலமுறை குத்தினார். இதில் படுகாயமடைந்த குராசிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குராசிஸின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; கொலை செய்த ஹன்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.