அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு!… தமிழ்நாட்டுக்கு புதிய எச்சரிக்கை!
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் வேகமாக பரவிவருவதால், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத்துறை செல்வ விநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் (Kyasanur Forest Disease) கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக காணப்படுகிறது. முன்னதாக, இதனால் குரங்குகள் (Monkey) மட்டும் பாதிக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில், இது மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸானது பாதிப்பிற்கு ஆளான விலங்குகள் சாப்பிட்டு விட்டு போட்ட உணவுப் பொருட்கள் மூலம் பரவுகிறது. இவை சாப்பிட்ட உணவுகள் ஆங்காங்கே சிதறி கிடந்தால் அவற்றை தொடும் மனிதர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது. இந்த பாதிப்பு வந்துவிட்டால் தலைவலி, உடல் வலி, வாந்தி, அடிவயிற்றில் வலி, திடீர் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகிய அறிகுறிகள் தென்படும்.
இந்த நிலையில், இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக பொது சுகாதாரத்துறை செல்வ விநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு கர்நாடகாவில் 53 ஆக உள்ளதாகவும், உத்தர கர்நாடகாவில் 37 பேருக்கும், ஷிமோகாவில் 13 பேருக்கும், சிக்மங்களூரில் 3 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுதொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம். அந்தவகையில்,கேரளா, கர்நாடகா எல்லைகளையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோன்று காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தி பாதிப்பை அறிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். குறிப்பாக கால்நடைகளை தூய்மையாக பராமரிப்பதை காடுகளுக்குள் அவை செல்லாமல், தடுப்பதையும் உறுதிசெய்யவேண்டும் தொற்றை பரப்பும் உண்ணி பூச்சிகளை கண்டறிந்து அழிக்க வேண்டும். பூச்சி கடிகள் ஏற்படாதவாறு முழுமையாக மூடிய ஆடைகளை அணியவேண்டும் என்று அறிவுறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.