அதிகரிக்கும் காற்று மாசு..!! மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு..!!
காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (வியாழன்) 460 ஆக இருந்த டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI), தற்போது 376 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தினசரி கூடுதலாக 20 மெட்ரோ ரயில் சேவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காற்று மாசு உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களையும் பாதிக்கலாம்.
இந்நிலையில், டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு, காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான ஆலோசனையை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சுகாதாரத் துறைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் நோய்களை கண்காணிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசரநிலைகள், நோயாளிகளின் மருத்துவப் பிரிவுகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுகளில் தேவையான பராமரிப்பு தயாரிப்புகளை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவமனைகளுக்கு ஆலோசனைகளை வழங்க மாநில சுகாதாரக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, படுக்கைகள், மருந்துகள், கேஸ் மேனேஜ்மென்ட் தொடர்பான உபகரணங்களை அதிகரிக்க வேண்டும். காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்க மரக்கட்டைகள் மற்றும் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். டீசலால் இயங்கும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் வெளியே சென்று விளையாடுவது மற்றும் வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படக்கூடிய மக்கள், உடல்நலப் பிரச்சனைக்கான அறிகுறிகளை உணரும்போது மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.