வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்வு...! முதல்வர் அசத்தல் அறிவிப்பு...!
வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி; 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – மானியக் கோரிக்கைகள் மீது அனைத்து எம்எல்ஏக்களும் மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் வளர்ச்சிக்காக தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இடையில் தடைபட்டிருந்தாலும் மீண்டும் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். கல்வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோன்று பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்திக் கொடுத்திருக்கின்ற ரூ.2.25 லட்சம், அதில் நம்முடைய நிதியையும் சேர்த்து அதையும் ரூ.5 லட்சமாக கொடுக்கப்படும். மத்திய அரசு அளிக்கும் நிதியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மாநில அரசின் நிதியின் மூலமாகவும் கல்வீடு கட்டும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம் என தெரிவித்துள்ளார்.