வாவ்...! வரும் 11,12-ம் தேதி... தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் "வேர்களைத் தேடி" திட்டம் துவக்கம்...!
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் "வேர்களைத் தேடி" திட்டம் துவக்கம்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி. வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் "அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை" செயல்பட்டு வருகிறது.
அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு "அயலகத் தமிழர் தினம்" எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத்தேடி" என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனடிப்படையில் வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி காலை 8 மணி அளவில் மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து பயணம் தொடங்குகிறது. தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான் அவர்கள் இப்பண்பாட்டு பயணத்தை துவக்கி வைக்கிறார்.
இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்துள்ளனர். இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம்,சிற்பம், ஓவியம், சுதந்திர போராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள்.
மூன்றாவது ஆண்டாக அயலகத்தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.