ராமர் கோவில் திறப்பு விழா!… அனைத்து சிறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்!
உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்தார்.
அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. விழாவில் பங்கேற்க தலைவர்கள், பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பல்வேறு நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதாவது, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதுதவிர, பல்வேறு இந்திய தூதரகங்களிலும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தர்மவீர் பிரஜாபதி கூறுகையில், “தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.” என்றார். கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல என்றும் அவர் கூறினார்.