Rabbit Farming : லட்சத்தில் வருமானம் தரும் முயல் பண்ணை..!! முதலீடு முதல் லாபம் வரை முழு விவரம் உள்ளே..
முயல்களை செல்லப்பிராணிகளாக மட்டுமல்லாமல், வருமானத்துக்காகவும் வளர்க்கலாம். முயல்களை எப்படிப் பராமரிப்பது, என்னென்ன உணவுகள் கொடுப்பது, இந்தத் தொழிலை ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற முயல் வளர்ப்பு பிசினஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
தற்போது வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்க விரும்புவர்களின் தேர்வில் முயல் வளர்ப்பும் முக்கிய இடம் பெறுகிறது. செல்லப்பிராணியாக வளர்க்க, இறைச்சி தேவைக்கு, பரிசோதனை பிராணியாகவும் தேவையிருப்பதால் முயல்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மற்ற கால்நடை வளர்ப்பை விட முயல் வளர்ப்பினால் சிறிய முதலீடு செய்து எளிதாக வருமானமும் பெறலாம்.
முதலீடும் லாபமும்.. பத்துக்கு நாலடி இடம் இருந்தாலும் ஒரு யூனிட் முயல்களை வளர்க்கலாம். ஒரு யூனிட் அமைப்பதற்கு 8,000 முதல் 12,000 ரூபாய் செலவாகும். ஒரு யூனிட்டில் 7 பெண் முயல்கள் இருக்கும். ஒரு பெண் முயல் 7 அல்லது 8 குட்டிகள் ஈனும். இதில் தலா 5 குட்டிகள் ஆரோக்கியமாக இருந்தாலே, ஓர் ஈட்டுக்கு 35 முயல் குட்டிகள் தேறும். முயல்கள் குட்டிப்போட ஆரம்பித்தால், ஒரு யூனிட்டுக்கு மாதத்துக்கு 8,000 அல்லது 9,000 ரூபாய் வரை கிடைக்கும்.
இதையே 10 யூனிட் வைத்து முயல்களை வளர்த்தால் நாற்பதாயிரம், 50,000 ரூபாய் எனத் தாராளமாகச் சம்பாதிக்கலாம். தரத்தின் அடிப்படையில் இறைச்சிக்கும் பரிசோதனைக்கும் வாங்குபவர்களுக்கு முயல்களை 500 ரூபாய்க்கு விற்கலாம். செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புபவர்களுக்கு 300 ரூபாய்க்கு கொடுக்கலாம். வெயில் காலத்திலும் சத்தம் அதிகமான இடத்திலும் முயல்கள் இணைசேருவது குறைந்துவிடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முயல்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்? ஒரு வேலை பார்த்துக்கொண்டே கூட முயல் வளர்க்கலாம். காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் செலவழித்து முயலுக்கு தீவனம் வைப்பது, அது வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை முயல் குட்டிப் போட்டிருந்தால், அதைப் பார்ப்பதற்கும் அதற்கு ஏதாவது உடல்நல பிரச்னை வந்தால் மருந்து தருவதற்கும் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாகத் தேவைப்படும்.
பெண் முயல்கள் பிறந்த 6-வது மாதத்திலிருந்தே இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குட்டிப்போடும். ஓர் ஈட்டுக்கு 7 அல்லது 8 குட்டிகள் போடும். இதில் 5 ஆரோக்கியமாக இருந்தாலும் லாபம்தான். முயல் கூண்டுக்குள் ஒரு பாக்ஸ் வைத்துவிட்டால், தாய் முயல் அதற்குள் குட்டிப் போட்டுவிடும். தாய் முயல்களே தன் குட்டிகளுக்கு சரியாக பால் கொடுத்து, நல்லபடியாகப் பராமரிக்கும் என்பதால் நாம் பெரிய அளவுக்கு மெனக்கெட வேண்டியிருக்காது.
ஆனால், குட்டிகளுக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறதா என்பதை அவற்றின் வயிற்றை வைத்து கவனிக்க வேண்டும். ஒருவேளை குட்டிகளுக்கு பால் போதாமல் இருந்தால், தாய்க்கு கால்நடை மருத்துவமனையில் இருந்து மருந்து வாங்கி வந்து உணவுடன் கலந்துக் கொடுக்க வேண்டும். அல்லது அந்த நேரத்தில் குட்டிப்போட்டிருக்கிற இன்னொரு தாய் முயலின் சாணத்தை பால் போதாமல் இருக்கிற குட்டியின் மீது தடவி, அதை அந்தத் தாய் முயலிடம் விடலாம். அதுவும் தன்னுடைய குட்டி என்று நினைத்துக்கொண்டு பால் கொடுத்துவிடும். முயல்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை வேப்பிலைக் கொடுத்து வந்தால், முயலில் வயிற்றில் இருக்கிற புழுக்கள் வெளியேறிவிடும். குட்டி போட்டவுடன் தாய் முயலுக்கு 5 மில்லி வேப்பெண்ணெய் கொடுத்து டி வார்மிங் செய்ய வேண்டும்.
முயலுக்கு கொடுக்க வேண்டிய தீவனம் : மாமிசத்துக்காக வளர்க்கிற முயல்களுக்கு இரண்டு நேரம் அடர் தீவனமும், ஒரு நேரம் அடர் தீவனத்துடன் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிறந்த இரண்டு மாதங்களிலேயே ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை வைக்கும்.
வேப்பங்கொட்டை பிண்ணாக்கு, புளியங்கொட்டை பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, சோயா பீன்ஸ் பிண்ணாக்கு, கோதுமைத் தவிடு ஆகியவற்றை சேர்த்துக்கொடுப்பதுதான் அடர் தீவனம். இதில் சோயா பீன்ஸ் பிண்ணாக்கு மட்டும் 60 சதவிகிதம் இருக்க வேண்டும். அப்போதுதான் முயல்கள் சீக்கிரம் எடைபோடும். வளர்ந்த முயல்களுக்கு தினமும் 120 கிராம் அடர் தீவனத்தை, காலை, மாலை சரிபாதியாகப் பிரித்துத் தர வேண்டும்.
கூண்டில் வைத்து வளர்க்கிற முயல்களுக்கு கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற செரிமானம் ஆவதற்கு கடினமானக் காய்கறிகளைக் கொடுக்கக் கூடாது. அதற்குப் பதில் பசுந்தீவனமாக கொய்யா இலை, முருங்கை இலை, வேப்பிலை, வாழையிலை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து ஒரே வகையான இலைகளைக் கொடுத்து வந்தால் முயல் சாப்பிடாது. வளர்ந்த முயல்களுக்கு நாளொன்றுக்கு 300 கிராம் பசுந்தீவனத்தை காலை, மாலை என சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
Read more ; வட்டி கிடையாது.. பெண்களுக்கு ரூ 3 லட்சம் கடன் தரும் மத்திய அரசு..!! எப்படி விண்ணப்பிப்பது?