UK election | சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட AI ஸ்டீவ், 179 வாக்குகள் பெற்று தோல்வி..!!
பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ‘ஏஐ ஸ்டீவ்’ எனும் ஏஐ அவதார், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டது. அந்த நாட்டின் தொழிலதிபர் ஸ்டீவ் எண்டாகோட் (Steve Endacott) தான் இதன் பின்னணியில் உள்ளார்.
தேர்தலில் ஏஐ ஸ்டீவ் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்துக்கு 59 வயதான ஸ்டீவ் எண்டாகோட் செல்வார். தேர்தல் என்றாலே பிரச்சாரம் என்பது அதன் அடிப்படைகளில் ஒன்று. அந்த வகையில் வாக்காளர்களுடன் 24x7 உரையாடும் வகையில் இதனை அறிமுகம் செய்துள்ளார் ஸ்டீவ் எண்டாகோட். பிரிட்டனில் உள்ள பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் சுயேச்சையாக ஏஐ ஸ்டீவ் களம் கண்டது. யதார்த்த அரசியலில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ‘ஸ்மார்ட்டர் யூகே’ எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இருந்தும் அதனை இன்னும் முறைப்படி பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.
ஸ்டீவ் எண்டாகோட் தலைவராக உள்ள நியூரல் வாய்ஸ் என்ற நிறுவனம் தான் ஏஐ ஸ்டீவை வடிவமைத்துள்ளது. பல்வேறு நிறுவனங்களுக்கு ஏஐ வாய்ஸ் அசிசஸ்டன்ட்களை வடிவமைத்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் மக்கள், ஸ்டீவ் உடன் சாட் செய்யலாம். அது குரல்வழி மற்றும் டெக்ஸ்ட் என உள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்காவின் வயோமிங் மேயர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தனக்காக ஏஐ அவதார் ஒன்றை பயன்படுத்தி இருந்தார். அந்த வகையில் இது போன்ற முயற்சிகள் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
இந்நிலையில், பிரிட்டன் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி, ஏஐ ஸ்டீவ் களம் கண்ட பெவிலியன் தொகுதியில் 179 வாக்குகள் மட்டுமே பெற்றது. மொத்தத்தில் 0.3% என்ற விகிதத்தில் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியது. பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் 70% வாக்குகளை பெற்று, பசுமைக் கட்சியின் சியான் பெர்ரி அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி UK பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் 326 இடங்களுக்கு மேல் பெரும்பான்மை அரசாங்கத்தைப் பெற்றது. இந்த தீர்க்கமான வெற்றியானது 14 ஆண்டுகால பழமைவாத ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது, ஸ்டார்மர் பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.
Read more : 1982-ல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட மனிதனுக்கு நடந்தது என்ன?