கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்.. 10 ஆண்டுகளில் இத்தனை வழக்குப்பதிவா? - காவல்துறை வெளியிட்ட டேட்டா
சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த 10 ஆண்டுகளில் 231 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த மாணவர் சுந்தர், கடந்த அக்.4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்திய மாணவர் சங்கம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு இடையேயான ஒற்றுமை குறித்தான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். காவல்துறை தரப்பில், வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதியபட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் சென்னைக் கல்லூரி மானவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், 33 வழக்குகள் ரயில்வே போலீசார் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
Read more ; உங்க வீட்டில் டீனேஜ் பிள்ளைகள் இருக்காங்களா? அப்ப முதல்ல இதை படிங்க..!