கடத்தியவரை பிரிய மனமில்லாமல் கதறி அழும் குழந்தை..!! - நெகிழ்ச்சி சம்பவம்
ஜெய்பூரில் குழந்தையை கடத்திய துறவியிடம் இருந்து, பிரிய மனமில்லாமல் தாயிடம் வர மறுக்கும் குழந்தையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு பிருத்வி என்ற 11 மாத குழந்தை காணாமல் போனது. பெர்றோர் அளித்த புகாரின் பேரில் சங்கனேர் சதர் காவல் நிலையப் பகுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட அந்த குழந்தையை காவல்துறையினர் மீட்டனர். கடத்தப்பட்ட குழந்தை கடத்தியவரைவிட்டு, பிரிய மனமில்லாமல் தாயிடம் வர மறுத்து கதறி அழும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்டவர் யமுனை நதிக்கு அருகில் துறவியாக வசித்து வந்தார். அவர் பெயர் தனுஜ் சாஹர், இவர் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். இவர் உத்தரபிரதேசத்தின் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தார். ஆனால், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டார். தனுஜ் முன்பு உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாக பணியாற்றியவர். தனது அடையாளத்தை மறைக்க நீண்ட தாடி வளர்த்த அவர், சில நேரங்களில் அந்தத் தாடிக்கு வெள்ளை நிறம் பூசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், கடத்தப்பட்ட பிருத்வியை தன் மகனாகக் கருதி வளர்த்து வந்துள்ளார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனுஜ் அலிகார் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய காவல்துறையினர் வந்தபோது, கடத்தப்பட்ட குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயன்றார். அவரை 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற காவல்துறையினர் அவரைப் பிடித்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தியவரை பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுத விடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Read more ; MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி..!! சிகிச்சை பலனின்றி இன்று மரணம்..!!