ஹெல்ப் பண்ணது குத்தமா? பைக்கில் Lift.. கடைசியில் Theft..!! கோவையை அதிர வைத்த சம்பவம்..
கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்பதுபோல நடித்து கடத்திச்சென்று பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து இரவு 9 மணிக்கு நல்லாம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாலை ஓரத்தில் நின்ற நபர் ஒருவர் அந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டிருக்கிறார். அதை பார்த்ததும் அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியதுடன், அந்த நபரை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றபோது பின்னால் இருந்த நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த வாலிபர் கழுத்தில் வைத்திருக்கிறார்.
சத்தம் போட்டால் குத்திவிடுவேன், நான் சொல்லும் இடத்துக்கு செல் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர், வேறு வழியின்றி அந்த நபர் சொன்ன இடத்துக்கு பயந்தபடியே இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். இறுதியாக கணபதி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் விட சொல்லியிருக்கிறார். அங்கு 5-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் நின்றிருக்கிறது. அங்கு சென்றதும், அந்த கும்பல், வாலிபரிடம் நகை, பணத்தை உடனடியாக எடுத்துக்கொடு, இல்லை என்றால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
தன்னிடம் நகையோ, பணமோ இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், ஒரு மாத்திரையை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றியுள்ளனர். அந்த மாத்திரையை அவர் சாப்பிட்டதும், அவருக்கு போதை ஏறியது. உனது நண்பர்களை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் அனுப்ப சொல் என்று மிரட்டியிருக்கிறது. இதற்கு அந்த இளைஞன் மறுக்கவே, சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் காயம் அடைந்த அந்த வாலிபர், தனது நண்பர்களுக்கு போன் செய்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்ப சொல்லியிருக்கிறார்.. அந்த பணம் வந்ததும், அந்த கும்பல் வாலிபரின் ஜிபே மூலம் ஸ்கேன் செய்து அந்த பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் மட்டும் ஒரே நாளில் 3 பேரிடம் இதுபோன்று பணம் பறித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more ; 56 ஆண்டுகளில் கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ..!!