சென்னையில் இன்று ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும்...! அரசு அதிரடி உத்தரவு...!
சென்னையில் இன்று ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது
புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவை பிறப்பித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய ஏதுவாக பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.