சங்கரன்கோவில் 4 பேருக்கு மரண தண்டனை...! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!
2014 ல் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உடப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த மக்கள், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில், இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த வேணுகோபால், முருகன், ஆகியோர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் உடப்பன் குளம் வந்துள்ளனர்.
அப்போது வடமன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் பைக்கை வழிமறித்து காளிராஜ், வேணுகோபால், முருகன் ஆகிய மூன்று பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து அப்போதைய சங்கரன்கோவில் டிஎஸ்பி விசாரணையின் பெயரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி உள்பட 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோர் மூவரை கொலை செய்த குற்றம் வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த குற்றம் உள்ளிட்டவைகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 5 நபருக்கு தலா 5 ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பு வழங்கினார்.