"சப் ஜெயிலாக மாறிய சொகுசு மாளிகை.."! ஆடம்பர பங்களாவில் முன்னாள் பிரதமரின் 3 வது மனைவி கடுங்காவல் சிறை.!
பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பரபரப்பான தீர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
அரசு தொடர்பான ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தோஷகானா வழக்கு தொடர்பான தீர்ப்பையும் நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடியாலா சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி ஆகியோருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியானது. வெளிநாட்டு தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசு பொருட்கள் குறித்து போலியான கணக்கு சமர்ப்பித்ததாக வழங்கப்பட்ட குற்றச்சாட்டில் இந்த தீர்ப்பு வெளியானது.
மேலும் இம்ரான் கான் 10 வருடங்களுக்கு அரசு பொறுப்பு வகிப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் மனைவி ராவல்பிண்டியில் உள்ள சிறைச்சாலையில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை இம்ரான் கானின் பானி காலா பங்களாவில் சிறை வைக்க இஸ்லாமாபாத் உயர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சொகுசு பங்களா பானி காலா மறு உத்தரவு வரும் வரை சப் ஜெயிலாக செயல்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
அந்த பங்களாவின் ஒரு பகுதி சிறைச்சாலையாக மாற்றப்பட்டு இம்ரான் கானின் மனைவி புஷாரா பிபி சிறை வைக்கப்பட்டுள்ளார்.இம்ரான் கானின் இல்லத்திற்கு வெளியே இஸ்லாமாபாத் காவல் துறையினர் தங்கியிருக்கும் அதே வேளையில், சிறை ஊழியர்கள் பானி காலாவுக்குள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று 'ARY' நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.