”உறுதியாக சொல்கிறேன்”..!! ”பாஜகவுடன் கூட்டணி இல்லை”..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!
சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இன்றைய தினம் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். தொண்டர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாநில அரசை மட்டுமல்லாது மத்தியில் ஆளும், ஆண்ட அரசுகளையும் விமர்சனம் செய்தார். பாஜக, காங்கிரஸ் கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகிய பிறகு ஸ்டாலினுக்கு தூக்கம் போய் விட்டது.
சிறுபான்மை மக்களின் வாக்கு சிதறிவிடும் என்ற அச்சத்தில் புலம்பி வருகிறார். பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிசாமி கூறியவுடன் கூட்ட அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் பலரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். சிலர் விசிலடித்தும் உற்சாக மிகுதியில் நடனமாடினர்.