’நான் தப்பு பண்ணல’..!! ’நிச்சயம் நிரூபிப்பேன்’..!! இயக்குநர் அமீர் பரபரப்பு பேட்டி..!!
என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
2,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,500 கிலோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த 9ஆம் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அதற்கான முன்பணமாக 28 லட்சம் ரூபாயை அமீர், ஜாபர் சாதிக்கிடமிருந்து பெற்றது தெரியவந்தது.
மேலும், கடந்த 2014 முதல் ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீர் உட்பட 3 நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி டெல்லியில் இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை ஆரம்பித்த சோதனை இன்று காலை நிறைவடைந்தது. இந்நிலையில், இது தொடர்பாக இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”என் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை 11 மணி நேரம் சோதனை நடத்துயது. சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். என்ன ஆவணங்கள் என்று அவர்கள் தான் சொல்வார்கள்.
எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என்று தொடக்க காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். எப்போதும் என்னிடமிருந்து வரும் ஒரே வார்த்தை - இறைவன் மிகப்பெரியவன். உள்நோக்கத்துடன் சோதனை செய்தார்களா? என்பதை நான் உறுதியாக சொல்ல முடியாது. ஒருநாள் நிச்சயம் இதுகுறித்து பேசுவேன். விசாரணை முழுமையாக முடிவடையாததால், அதைப்பற்றி பேசி மேலும் சிக்கலாக்கி கொள்ளக் கூடாது. என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது மட்டும் உண்மை. விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால், விசாரணை நடத்துவதற்கு பின்னால் அழுத்தம் உள்ளதா? என எனக்கு தெரியாது” என்றார்.
Read More : Watch Video | சூரிய கிரகணத்தின்போது வானத்தில் வட்டமடித்த ஏலியன்கள்..!! பொதுமக்கள் அச்சம்..!!