11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு...! சென்னை ஐஐடி அறிமுகம் செய்த சான்றிதழ் படிப்பு...!
பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு’, ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களைக் கொண்டு இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இப்படிப்புகளின் மூலம் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இந்தத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் வகையில் மாணவர்களுக்கான அறிமுகப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் உயர்கல்வி, தொழில்நெறி ஆகியவை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து முடிவெடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.
அடுத்த தொகுதி 21 அக்டோபர் 2024 அன்று தொடங்குவதையொட்டி, அதற்கான விண்ணப்பப் பதிவுகள் செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து செயல்பட விரும்பும் பள்ளிகள் https://school-connect.study.iitm.ac.in/ என்ற இணைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.