மசோதாக்களை மீண்டும் அனுப்பினால் ஒப்புதல் தர வேண்டும்..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு இணங்காத அவரின் செயல்பாட்டை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் மசோதாக்கள், அரசு உத்தரவுகள் மீது ஆளுநர் முடிவு எடுக்க கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தரப்பில் குழப்பம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், 10 மசோதாக்களையும் தமிழ்நாடு அரசு முதலில் அனுப்பிய போதே ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியிருக்கலாமே? என்றும் கேள்வி எழுப்பியது.
மசோதாக்களுக்கு ஒப்புதலும் தராமல், சட்டப்பேரவைக்கும் திருப்பி அனுப்பாததால் அவரது தரப்பில் குழப்பம் உள்ளது எனவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டு மறு நிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை நிறைவற்றப்பட்ட மசோதாக்களை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்? ஆளுநர் தீர்வு காண வேண்டும், இல்லையெனில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.