இப்படி ஆக்கிரமிப்பு செய்தால் எப்படி சென்னை தப்பிக்கும்..? தீயாய் பரவும் வேளச்சேரியின் பழைய மேப்..!!
சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக சென்னையின் தாழ்வான பகுதி என்று கருதப்படும் வேளச்சேரி பகுதியில் மிக கனமழை பெய்துள்ளது. அங்கே கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சேரி என்று முடியும் பகுதிகள், பாக்கம் என்று முடியும் பகுதிகள் எல்லாமே ஏரிகள், குளங்கள், நதிகள் கொண்ட நீர் நிலை பகுதிகள் ஆகும். உதாரணமாக காரப்பாக்கம், ஊரப்பாக்கம் எல்லாமே ஒரு காலத்தில் நிறைய ஏரிகள் கொண்ட இடங்கள் ஆகும்.
அதேபோல் வேளச்சேரி போன்ற இடங்களில் மிக அதிக அளவில் நிலப்பகுதிகளை மட்டுமின்றி ஏரிகளை கொண்ட இடம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இங்கே ஏராளமான ஏரிகள் இருந்துள்ளன. இவை எல்லாம் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. காலப்போக்கில் இந்த நிலங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட காரணம் இவர்கள்தான் என்று எந்த அரசையும் குற்றம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், காலப்போக்கில் எல்லா ஆட்சிகளிலும் இது போன்ற ஆக்கிரமிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
பொதுவாக நதிகளுக்கும், யானைகளுக்கும் ஒரு குணம் உண்டு. யானைகளின் பாதைகளை மறைக்க முடியாது. யானைகள் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டினால் யானைகள் வழி மாறி செல்லாது. யானைகள் தாங்கள் எப்போதும் செல்லும் பாதைகளை மாற்றாது, மறக்காது. அப்படித்தான் நதிகளும். அவை எப்போதும் செல்லும் பாதைகளுக்கு கண்டிப்பாக சென்று விடும். அப்படித்தான் இப்போது வெள்ளம் ஏற்பட்ட சென்னையின் பல பகுதிகள் ஏற்கனவே ஒரு காலத்தில் நதியாக இருந்தது. இப்போது ஆக்கிமிரப்பு காரணமாக வீடுகளாக, குடியிருப்புகளாக மாறியுள்ளன.
உதாரணமாக வேளச்சேரி பகுதியில் வெள்ளம் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று அங்கே செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகள் தான். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் வேளச்சேரி எப்படி இருந்தது என்ற பழைய மேப் ஒன்று டிரெண்டாகி வருகிறது. அதன்படிம், வேளச்சேரி ஏரி இருந்த இடம்.. தற்போது அந்த இடத்தில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை காட்டும் விதமாக ஒப்பீட்டு புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. இந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகளை செய்தால் சென்னை எப்படி புயல், வெள்ளத்தில் இருந்து தப்பிக்கும் என்ற கேள்வியை எழுப்பும் விதமாக , இந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.