பெண்களுக்கான சூப்பர் திட்டம்... ரூ.2 லட்சம் முதலீட்டிற்கு ரூ.31,125 வட்டி..!! ஆஹா!
தபால் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் மேல் முதிர்வுத் தொகையைப் பெறலாம்.
மத்திய அரசு பல தரப்பட்ட மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில், பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள், முதியவர்கள் அல்லது இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினருக்கும் ஏற்ற வகையில், தபால் அலுவலகம் மூலம், மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு திட்டங்கள் மூலம் சிறுசேமிப்பின் பலனை பெற்று பெரும் நிதியை சேமிக்க முடியும்.
அந்த வகையில், பெண்களுக்காக பல சிறந்த அஞ்சல் அலுவலக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம். இதில் குறுகிய கால முதலீட்டில் பெரும் வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யும் முறை மற்றும் அதன் அளப்பரிய நிதி பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் தபால் அலுவலகத்தின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியதில்லை. இதில் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு வருடங்களில் முதலீட்டிற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, பெண்கள் சேமிக்கவும், தன்னிறைவு பெறவும் உதவும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும் அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களும் தங்கள் கணக்குகளைத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஆகையால், ஒருமுறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாவது ஆண்டில் ரூ.16,125 வருமானம் கிடைக்கும். அதாவது இரண்டு வருடங்களில் ரூ.2 லட்சம் முதலீட்டில் திட்டத்தின் கீழ் ரூ.31,125 வட்டி வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.