”இனி தேர்வுகளில் மோசடி செய்தால்”...!! ”10 ஆண்டுகள் சிறை”..!! ”ரூ.1 கோடி அபராதம்”..!! மக்களவையில் புதிய மசோதா தாக்கல்..!!
நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் வகையில், புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் நோக்கில் புதிய மசோதாவை மத்திய அரசு இன்று கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கவும் புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.