இனி இப்படி சிம் கார்டு வாங்கினால் 3ஆண்டு சிறை..! ரூ.50 லட்சம் அபராதம்..! புதிய தொலைத் தொடர்பு மசோதா சொல்வதென்ன..!
கடந்த திங்கள்கிழமை மக்களவையில் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தொலைத்தொடர்பு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும் அல்லது பொதுநலன் கருதியும் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தமது கட்டுப்பாட்டுக்குள் மத்திய மாநில அரசுகள் கொண்டுவரலாம். அந்த சேவைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் அல்லது சூழ்நிலைக்கு உகந்தது என்று கருதினால், மத்திய மாநில அரசுகள் அல்லது அலை சார்பாக சிறப்பு அதிகாரம் பெற்ற அதிகாரம் பெற்ற அதிகாரி, அறிவிக்கை வெளியிட்டு அதை செய்யலாம். மேலும் ஆள்மாறாட்டம் மோசடி மூலம் தொலைத்தொடர்பு சாதங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்டவைகள் இருந்தது.
இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் (நேற்று)புதன்கிழமை நடைபெற்றது. பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் அவர்களால் விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த மசோதா தொலைத்தொடர்பு துறையில் அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்களை ஊக்குவிக்கும். 138 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்திய தந்தி சட்டம் உள்பட 2 சட்டங்களை இந்த மசோதா ரத்து செய்யும். மேலும், இணைய வழி பாதுகாப்பு பிரச்சனைகளை கையாளுவதற்கான சட்ட அமைப்பு முறையையும் மசோதா வலுவாக்கும் என்று கூறினார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய தொலைத் தொடர்பு மசோதா 2023ன் முக்கிய அம்சங்கள் என்ன: போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. சிம் பாக்ஸ் போன்றவற்றின் மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். தனியார் சொத்தாக இருந்தால், உரிமையாளருக்கும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அரசு தலைமையிலான சர்ச்சைத் தீர்வுக் கட்டமைப்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி உரிமைப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பார்கள். தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு, பொதுச் சொத்தாக இருந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்.