கொஞ்சம் இடம் கொடுத்தா பாஜக உள்ளே வந்துவிடும்...! நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்...!
240 உறுப்பினர்கள் கொண்டதுதான். அதனால், மிகவும் எச்சரிக்கையோடு பா.ஜ.க தலைமை செயல்பட வேண்டும்.
காஞ்சிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற திமுக பவள விழாப் பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; எல்லோரும் சொன்னார்கள்… நம்முடைய கூட்டணி அமைந்த பிறகு, தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், நம்முடைய கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டும் அல்ல; வெற்றிக் கூட்டணி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான இந்தியா கூட்டணியே அமைக்கப்பட்டது.
சில கட்சிகள் உருவாக்கும் கூட்டணிகள், தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தல் முடிந்ததும் கலைந்துவிடும். ஆனால் நம்முடைய கூட்டணி அப்படி அல்ல. நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா என்று வேதனையில் பொய்களைப் பரப்பி, அற்பத்தனமான காரியங்களைச் செய்து, தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து கொள்கிறார்கள். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது. நாடாளுமன்ற, சட்டமன்ற வெற்றிக் கணக்கில் நம்முடைய அணி ஐக்கியமாகவில்லை. பாசிசத்தையும், மதவாதத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என்பதற்காக, ஐக்கியமாகி இருப்பவர்கள் நாம்.
ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே உணவு - ஒரே பண்பாடு - ஒரே தேர்வு - ஒரே தேர்தல் - ஒரே வரி என்று ஒரே பாட்டை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறை சாத்தியமற்ற, சிக்கல் நிறைந்த பிரச்சினை இது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கும், மக்களாட்சித் தத்துவத்துக்கும் விரோதமானது. இதனால் என்ன நடக்கும்? பல மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும். மாநிலங்களில் குழப்பம் ஏற்படும்.
மக்களவையின் வரலாறு என்ன? நாடாளுமன்ற மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இருப்பதும், பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க. அரசு அல்ல. 272 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சி அல்ல பா.ஜ.க. 240 உறுப்பினர்கள் கொண்டதுதான். அதனால், மிகவும் எச்சரிக்கையோடு பா.ஜ.க தலைமை செயல்பட வேண்டும். சிறிது இடம் கொடுத்தால் கூட பாஜக உள்ளே வந்துவிடும் என்றார்.