மக்களே கவனம்...! ரேஷன் பொருட்கள் தொடர்பான குறை... அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்றும், மக்களுக்கு தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார். மேலும் 1800 425 5901 மற்றும் 1967 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 195இன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.