உண்மையை சொன்னால் எதிர்க்கட்சிகள் அச்சமடைகிறது…! பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு..!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஓரிரு இடங்களில் வன்முறை அரங்கேறிய நிலையில், அதைத் தவிர பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் பிரச்சாரம் எல்லா இடங்களிலும் அனல் பறக்கிறது.
இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் நடக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கிருந்து மொத்தம் 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாவார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது.” எனக் கூறியிருந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர் மேலும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இது குறித்து புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போதும் பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு தொடர்ந்துள்ளது.
இன்று ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை நான் வெளியில் கொண்டு வந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அச்சமடைந்துள்ளது. உண்மையை சொன்னதால் இந்திய கூட்டணி கட்சிகள் அச்சமடைந்துள்ளது.
உங்களிடம் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறதா இல்லையா என்பதை காங்கிரஸ் கட்சி x-ray செய்து சோதனை செய்யும், வீட்டில் ஒரு டப்பாவில் பணம் போட்டுவைத்திருந்தாலும் அல்லது குழந்தைகளுக்கு கூடதலாக் சொத்து ஏதேனும் வாங்கி வைத்திருந்தாலும் சரி உங்களின் தேவைக்கு அதிகமான செல்வத்தை காங்கிரஸ் அரசு எடுத்துக்கொள்ளும், அதனை பிறர்க்கு கொடுத்துவிடுவது உண்மை தான். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உடைத்து தங்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு வழங்க நினைத்தது உண்மை." என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.